ஆமீன்

அந்தக் குழந்தை
அழுகிறது.
அதிரும் பயத்தில்
உடல்நடுநடுங்க
சொற்கள் நொறுங்க அழுகிறது.
வெடித்த குண்டுகளையோ
காணாத பெற்றோரையோ
குழம்பிய செவிப்பறையையோ
எண்ணி எண்ணி
கதறி அழுகிறது.

மருத்துவரின் தோளில்
வாடிச் சாய்ந்து
வாழ்நாளுக்குமான
அழுகையைத் துவங்குகிறது.
உனை இறுக அணைக்க
என் செய்வேன் செல்லமே?

இறைவனே மிகப் பெரியவன்.
இறைவனே மிகப் பெரியவன்.
இறைவனே மிகப் பெரியவன்.
மனிதன் மிகப் பெரிய சாத்தான்.
ஆமீன்.

18/10/2023

வரலாறு திரும்புகிறது.
குற்றம் புரிந்தவர்களே
குற்றம் சாட்டும் வரலாறு
திரும்பத் திரும்ப
திரும்பிக் கொண்டேயிருக்கிறது.

எது உண்மை?
எது ஆதாரம்?
எது வரலாறு?

எல்லாமே
உனது, எனது
என மாறுமெனில்,

இறைவன் மிகப் பெரியவன்.
இறைவன் மிகப் பெரியவன்.
இறைவன் மிகப் பெரியவன்.
உண்மை மிகப் பெரிய சாத்தான்.
ஆமீன்.

19/10/2023

Leave a comment