சிவமாலை: நாவல் விமர்சனம்

குறிப்பு : சில சமயங்களில் சில அன்புக் கட்டளைகள்தான் நம்மை இயக்குகின்றன. அப்படியானதொரு நீண்ட கால நண்பனின் அன்புக் கட்டளைதான், வாசிப்பை மறந்து வாழும் காலத்தில், கீழ்க்காணும் நூலை வாசிக்க வைத்தது. ரூமியின் மொழியில் சொன்னால், இந்த நூல் என்னை(யும்) தேர்ந்தெடுத்தது போலும்.

சமீபத்தில் கண்ட திரைப்படங்களில், “நட்சத்திரம் நகர்கிறது”, ஒரு திரைப்படமாகவே உருவாகாமல் கடுமையாக சோதித்தது. ஆனால், அத்திரைப்படத்தில் இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் முதலானோரின் வாழ்க்கை ஒரு ஆவணப்படம் போல அருமையாகத் தொகுக்கப்பட்டிருந்த விதம், நமது தாய்த்தமிழ் மண்ணில் கோலோச்சும் சாதிவெறியின் மாண்புகளை வருங்காலத்திலும் கூட புரிந்து கொள்ள உதவும் என்பது ஆறுதலளித்தது.

அவ்வகையில், சாதி குறித்த உரையாடல்களில், புரிதல்களில், மாற்றங்களில், தமிழகத்தில் நிகழ்ந்த நகர்வுகளை, ஒரு நூல் விமர்சனத்தில் சுருக்கி விட முடியாது. எனவே, திரு.லட்சுமிபாலன் 1986-ல் எழுதியுள்ள சிவமாலை எனும் இச்சிறு நூலை மட்டும் இப்பதிவில் கவனம் கொள்கிறேன்.

இந்நூல், சாதி குறித்த நமது பல்வேறு வகைப்பட்ட பார்வைகளில் எடுத்துப் பார்க்கத்தக்க ஒரு பார்வைதான். மேலோட்டமாகப் படித்தால், சாதி வெறி எதிர்ப்பு நாவலாகக் கொள்ளலாம் என்றாலும், அதன் பல்வேறு இழைகள் சிக்கலானதாகத் தோன்றுகின்றன.

sivamaalai-novel-cover

சுருக்கமாக கதையை சொல்வதானால், தாழ்த்தப்பட்ட பெண்ணான சிவமாலையை திருமணம் செய்யும் இடைநிலை சாதியைச் சேர்ந்த செல்வம், வெறொரு இடைநிலை சாதியினர் வசிக்கும் கிராமத்தில் மனைவியின் சாதியை மறைத்து வாடகைக்கு வீடு பிடித்து குடியேறுகிறான். அங்கேயே நியாய விலைக் கடையில் வேலையும் செய்கிறான். மனைவியின் சாதியைக் கண்டறியும் கிராமத்தினர், ஊரை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கின்றனர். தொடரும் மிரட்டல், தாக்குதல், மற்றும் கலவரத்தில், தன் மனைவியையும், தன்னையும் வெட்டிக் கொன்று சாபமிட்டவாறு செல்வம் மரிக்கிறான்.

ஒரு நாவலாக (பல்வேறு அச்சுப் பிழைகளையும், மெய்ப்புப் பிழைகளையும் தாண்டி) தங்கு தடையற்று, சம்பவங்களின் தொடர்ச்சியில், நம்மை வாசிப்பு அனுபவத்தில் ஆழ்த்துவதில், நாவல் வெற்றி பெறுகிறது. ஒரு அடிப்படையான வடிவப் பிரச்சினை என்னவெனில், நாவல் காலத்தை எங்கும் பதிவு செய்யவில்லை. அது அறிந்தே செய்யப்பட்டிருந்தாலும், அது நிச்சயமாக 90-களுக்கு முந்தைய காலத்தையே குறிக்கிறது என ஊகித்துக் கொண்டுதான் வாசிக்க வேண்டும். காலம் குறித்த வேறொரு கேள்விக்கு பின்னர் வருவோம்.

செல்வம், மீனாட்சி, சிவமாலை குறித்த பாத்திர சித்தரிப்புகள் முரணாக மட்டுமின்றி, மேலோட்டமானதாகவும் இருக்கின்றன. குறிப்பாக, மீனாட்சி, சிவமாலை குறித்த ஆரம்பகட்ட சித்தரிப்புகள், தாழ்த்தப்பட்ட பெண்கள் குறித்த வழக்கமான கிராமத்து மேல்சாதி கதைப்புகளின் தன்மை கொண்டவையே. பிற்காலத்தில் வெளிவந்த இமையத்தின் “கோவேறு கழுதைகள்” போன்ற நாவல்கள், தலித் வாழ்வியல், தலித் பெண்களின் உளவியலை போர்க்குரலாக எழுப்பி, இத்தகைய பார்வைகளை உடைத்து நொறுக்கினாலும், இத்தகைய பார்வைகள் இன்னமும் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டுதானாக வேண்டும்.

செல்வத்தின் கதாபாத்திர சித்தரிப்பு மிகவும் சிக்கலானது. ஒரு புறம், கையாடல், ஏமாற்று வேலைகள், இறுமாப்பு, என வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் அயோக்கித்தனத்தை இயல்பாகச் செய்யும் செல்வம் போன்றவர்கள், குற்ற உணர்ச்சியில் தவித்து நிற்பதுமில்லை. ஊரைப் பகைத்து காதலுக்காக உயிர் விடுவதுமில்லை. தர்க்கத்தைத் தாண்டி, உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொண்டாலும், இறுதிக் காட்சி சாதி வெறிக்கு எதிரான செய்தியாக எதிரொலிக்கவில்லை. ஆணாதிக்கத்தின் கோரமுகம் சாதி கடந்த சர்வதேசிய உடைமை உணர்வு என்பதன் செய்தியாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று அம்பேத்கர் சொன்னது உண்மைதான். அதுவே தீர்வல்லவே. நாவல் எப்படி எழுத வேண்டும், எப்படி இறுதிக் காட்சி அமைந்திருக்க வேண்டும் எனச் சொல்வது, விமர்சனமாகாது. எனவே, அதனைத் தவிர்த்து, காலத்தின் கேள்விக்கு வருவோம்.

இந்த நாவல் வெளியாகி 36 வருடங்களாகின்றன. கவுசல்யாவும், சங்கரும் ஏதோ ஒரு கிராமத்தில் வாழ முயற்சிக்கவில்லை. உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் பெற்ற தந்தையே ஆள் வைத்து கவுல்சல்யாவின் கணவரை கொலை செய்தார். கவுசல்யாவும், சங்கரும் நாவலில் வருவது போல “தப்பு” செய்ததனால், திருமணம் செய்யவில்லை. “பொய்” சொல்லி எங்கும் குடியேறவில்லை.

இந்த அம்சத்தில்தான் நாவல் எழுப்பும் ஒரு அடிப்படையான, சரியான கேள்வி இன்னமும் உயிர்ப்போடிருக்கிறது.

ஒரு ஆணும் பெண்ணும் சாதியைக் கடந்து இணைந்து வாழ்வதில், குறிப்பாக தலித் ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்வதில், நமது சமூகம் இன்னமும் ஏன் இத்தனை பதற்றமடைகிறது?

ஏன் நாம் இன்னமும் சாதியக் குணம் குறித்த முடிவுறாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்கிறோம்? உலகமயமாக்கத்திலும், நகரமயமாக்கத்திலும் அழிந்து விடும் என நாம் நம்பிய சாதி எப்படி இறுகிக் கொண்டே இருக்கிறது? சாதி மேற்கட்டுமானமா, அடித்தளமா எனும் ஆராய்ச்சி என்றுதான் முடியும்? முடிந்தவுடன் புரட்சி சாதியை தகர்த்து விடுமா? அடையாள அரசியலின் அரசியல் இன்னும் எத்தனை காலம் தனிநபர் வழிபாடாகவே காலம் தள்ளும்? வர்ணமோ, அவர்ணமோ, எல்லா சாதியும் தனக்கான பெருமித அடையாளம் தேடும் பயணம் சாதியை ஒழிக்குமா? சாதியை இறுக்குமா? சமத்துவபுரம் என்றும் தனித்த தீவாகத்தான் இருக்க வேண்டுமா?

சாதி அழிய வேண்டும். ஆனால் அதனை எப்படி அழிப்பது என நமக்குத் தெரியவில்லை என நாம் தயக்கமின்றி ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். சிவமாலை நாவல் இந்த உணர்வினை, இதற்கான ஒடுக்கப்பட்டோரின் குரலை அதன் முழுமையில் வைக்கவில்லை.

முழுமையாக வைக்கப்பட்டதெல்லாம் வென்று விட்டதா என்ன?

Leave a comment