என்றுதானே

அரித்துத் தின்னும் 
கரையான்கள்
கண்ணிமைக்கும் பொழுதுகளில்,
உதிர்ந்து சரிந்து
பொலபொலவெனப் பரவும்
காகிதத் துகள்களில் பிரதிபலித்து
காலம் சிதறிய பிம்பங்களாகி கிடக்கின்றது.

துகள்களின் வழி மிதந்து வந்த மயிலிறகை வருடியவாறு
நாபியிலிருந்து நிறைந்து நிற்கும் அனலை விழுங்கிய வண்ணம்
அலமாரியை ஆயாசத்துடன் பார்!

காலமே, காலனே,
காலமே
காலனாவதாகுமெனும் அறிவே,

"த்தா வாடா.. என் காலருகே!"
என மீசை முறுக்கலாம்.
கூர்ந்து யோசிக்கலாம்.
வெறித்து நோக்கலாம்.
வேடிக்கை பார்க்கலாம்.
வேடிக்கை காட்டலாம்.

அனல் மேவ அறிவாய்தானே,
இறுதியில்
எல்லாம் ஒன்றுதான்
என்றுதானே அமர்ந்திருந்தாரே!

Leave a comment