கோசலை: இறக்கைகள் கொண்ட யானை!

தமிழ்ப் பிரபாவின் முதல் நாவலான “பேட்டை”-யின் வாசிப்பனுபவம், பெரும் நீர்ப்பரப்பில் நீர் வளையங்கள் போல மெல்ல விரிந்து பரவியது எனச் சொல்லலாம். அவரது இரண்டாவது நாவலான “கோசலை”, அதற்கு நேர் எதிராக கரை தாண்டும் வெள்ளம் போல விரைந்தோடுகிறது. எனினும், ஒரு மையக் கதாபாத்திரத்துடன் தொடர்ந்து பயணிக்க வைப்பதிலும், நிலப்பரப்பை பதிவு செய்வதிலும் நாவல் வெற்றி பெறுகிறது. கோசலையின் கூன், குள்ளம் என்பதெல்லாம் ஒரு உருவகம் மாத்திரமே என நாவல் துவங்கிய சில பக்கங்களிலேயே உணரத் துவங்கி விடுகிறோம்.

அம்பேத்கரின் ‘விசாவுக்காகக் காத்திருக்கிறேன்’ நூல் குறித்து, சாம்பசிவமூர்த்திக்கும், கோசலைக்கும் நடக்கும் உரையாடல், இந்த நாவலின் மிகப் பிரமாதமான பகுதி என்பது என் எண்ணம். அம்பேத்கரின் துன்பக் கதையை எடுத்துரைக்கையில் கோசலையின் catharsis (உளசுத்தி) நிகழ்வதை நாம் காணும் பொழுது, அம்பேத்கர் துயருறும் மக்களுக்கான இயேசு பிரானாக கரங்கள் விரித்து நிற்கிறார். எவ்வகையிலும் துருத்தலோ, வலிந்த எளிமைப்படுத்தலோ இல்லாமல், இயல்பான உரையாடலாக அதனைக் கட்டியமைத்த விதம், தமிழ்ப் பிரபாவின் எழுத்தில் உள்ள கலைத்தன்மையை மிளிர வைக்கிறது.

“பேட்டை” நாவலிலும் தமிழ்ப் பிரபாவிடம் நுண்மையான உளவியல் பார்வை வெளிப்பட்டது. நான் வாசித்ததில், மனப்பிறழ்வு குறித்த மிகக் கொந்தளிப்பான, உண்மைக்கு நெருக்கமான சித்தரிப்பு அந்நாவலில் இருந்தது. “கோசலை”-யிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் அத்தகைய பார்வைகள் வெளிப்படுகின்றன.

“வாழ்வில் அடுத்தடுத்து துன்பங்களையே சந்திக்க நேர்ந்து அதனால் ஏற்பட்ட மோசமான அனுபவங்களையே சுமந்தலைபவள் நாளடைவில், தாம் ஈடுபடுகிற ஒவ்வொரு காரியத்திலும் துன்பம் அடைகின்ற வழியை அறிந்து அதனுள் பிரவேசப்பட்டு தன்னை வருத்திக் கொள்ள தனக்குள் ஒரு வேட்கை இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.” (பக்-125) உளவியலில் தொடர் அமைவு (pattern) என்பது முதன்மையானது. முன்னர் குறிப்பிட்ட உரையாடலுக்குப் பின்னர், இந்த அமைவை கோசலை சுய உணர்வுடன், விழிப்புடன் உடைத்தெறிகிறாள். கோசலைக்கு அது எளிதாக அமையவில்லை. எந்தக் கோசலைக்கும் அது எளிதாக அமையப் போவதுமில்லை.

கோசலை துவங்கி, உஷா, பர்வதம்மா, மல்லிகாக்கா, பூர்ணிமா என பெண் கதாபாத்திரங்களில் வெளிப்படும் இழைகளும், நிறங்களும், ஆண் கதாபாத்திரங்களில் வெளிப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். சின்னச் சின்ன சிடுக்குகள் முதல், பெண் மொழி அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. அதே வேளையில், அலங்காரவேலன், கணேசன், ஜோதி முதலான ஆகிய அனைவரின் குணச்சித்திரங்களும் muted and passive-aggressive (மெளனிக்கப்பட்ட, செயலற்ற-ஆக்கிரமிப்பு நடத்தை) தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவே தோன்ற வைக்கிறது. சாம்பசிவமூர்த்தியின் குணச்சித்திரம் ஒற்றை நபராகத் தோற்றமளிக்கவில்லை. பேரும் புகழும் அற்ற எத்தனையோ அம்பேத்கரிய, திராவிட, மார்க்சிய இயக்கப் பெரியவர்களே நினைவுக்கு வந்தனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்பார்த்த திசையிலேயே நாவலின் போக்கு சென்றாலும், இன்னும் சொல்லப் போனால், ஏறத்தாழ உரையாடல்களே குறைந்து, சம்பவங்களின் விவரிப்பாகவே கடந்தாலும், கதை அலுக்கவில்லை. ஏனெனில், செயற்கையான உத்திகளோ, முடிச்சுகளோ இன்றி, பிரயத்தனமின்றி அதன் இயல்பான போக்கில் நியாயமாகவே இப்படித்தான் செல்ல முடியும் எனும் போக்கில் சென்றது. கோசலையின் பரிணாமம், அகிரோ குரசோவாவின் “இகுரு” திரைப்படத்தை ஒரு இணை கோடாக நினைவுக்கு கொண்டு வந்த வண்ணமிருந்தது.

“கலை கலைக்காகவே!” என நிலையெடுத்தாலும், இயல்பாக, மிகையின்றி அரசியலை எளிதில் பேச முடியும் என்பதற்கான சிறந்த முயற்சி கோசலை நாவல் என உறுதியாக சொல்லலாம். ரமணி சந்திரனிலிருந்து இமையம் வரைக்குமான கோசலையின் பயணத்தை சின்னச் சின்னச் குறிப்புகளில் நாவல் கடக்கிறது. இன்னமும் அழுத்தமான கதையை, காத்திரமான அரசியல், பண்பாட்டு உரையாடல்களை, தமிழ்ப் பிரபா எழுத வேண்டும். காரணீஸ்வரர் கோவிலின் வீரபத்திரன் துணை நிற்க, அத்தகையதொரு நாவலுக்கான கதாபாத்திரங்கள் அவரோடு பேசட்டும்.

Leave a comment