தோழர் மணி

கடந்த 26-ஆம் தேதியன்று, தோழர் மணி காலமான செய்தி அறிந்தேன். அவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ)-வில் பலரும் மணி என்ற பெயரைக் கைக்கொள்வதுண்டு. ஒரு சில பகுதிகளுக்கு மாத்திரம் அப்பெயரை பாவிப்பவர்களும் உண்டு. ஒரு வகையில், அப்பெயர் மா.அ.க முழுநேர ஊழியர்களின் அடையாளம் போல விளங்கிற்று எனச் சொல்லலாம். எளிமையான, சுருக்கமான, சாதி அடையாளமற்ற பெயர்.

தோழர் மணியை முதல்முறை சந்தித்த அனுபவம் என்னால் மறக்கவியலாதது. 1998-ஆம் வருடம். அது மொபைல்கள் இல்லாத கற்காலம். கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது, புதிய கலாச்சாரம் முதன்முறையாகப் படித்து, சுவரெழுத்தில் கண்ட முகவரியைத் தேடிச் சென்று, என்னைத் தொடர்பு கொள்வதற்கான தகவல்களை அளித்து வந்திருந்தேன். சில வாரங்கள் கழித்து, ஒரு மதிய வேளையில் கல்லூரி விடுதியில் எனது அறைக் கதவை நண்பனொருவன் தட்டுகிறான். “ஒன் ப்ரெண்ட் ஒருத்தர் ஒன்னப் பாக்க வந்திருக்காருடா..” என நமுட்டுச் சிரிப்புடன் சொல்லிச் செல்கிறான்.

நான் கீழே சென்று பார்த்தால், ஐம்பதைத் தொடும் ஒரு வேட்டி சட்டையணிந்த பெரியவர் ஒரு கைப்பையோடு நின்றிருந்தார். நான் ஒன்றும் பிடிபடாமல், அருகே சென்று “நீங்க..”? என்றேன். “நான் மணி.. மகஇக..” என்றார். எனக்குப் புரிந்து விட்டது. உறவினர் என்று சொல்லியிருக்கலாமே என சொல்லத் தோன்றியது. ஆனால் தயக்கத்தினால் விட்டு விட்டேன். அறைக்கு அழைத்துச் சென்றேன். அதன் பிறகும் ஏறத்தாழ இருபது வருடங்களுக்கும் மேலாக அவரிடம் ஒரு தயக்கமும், மரியாதையும் கூடிய உறவையே கொண்டிருந்தேன். தோன்றும் எல்லா விசயங்களையும் தயக்கமின்றி சொல்வது அவரிடம் ஏனோ சாத்தியமாகவேயில்லை.

அந்த முதல் சந்திப்பிற்கு பின்னர், “நண்பர்” தொடர்ந்து விடுதிக்கு வர ஆரம்பித்தார். மார்க்சிய-லெனினிய ஆரம்ப வகுப்பு பாடங்கள் எடுத்தார். அவர் அத்தனை ரசமாக எடுத்தார் என சொல்ல முடியாது. ஆனால், விடாப்பிடியாக வகுப்புகள் எடுத்தார். ஒரு விவசாயிக்கே உரிய அவரது அந்த விடாப்பிடியான தன்மை, அவரது ஆளுமையின் முக்கியமான அம்சமாக என்றும் விளங்கியது.

பின்னர், நான் விடுதியிலிருந்து மாறி தஞ்சை நகரத்தில் அறையெடுத்து கல்லூரிப் படிப்பின் கடைசி வருடங்களை கழித்தேன். அப்பொழுது, தோழர் மணியின் பொறுப்புகள், பல்வேறு பணிகள், இடையறாத பயணங்கள் குறித்து ஊகிக்க (ஆம், ஊகிக்க மாத்திரமே) முடிந்தது. அவர் என்னையும், என்னைப் போன்ற இளைஞர்களையும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார். ஆனால் அதனை அத்தனை நேரடியாக வெளிப்படுத்தியதில்லை.

அவரால் இயன்ற மட்டும் எங்களுடன் இரண்டறக் கலக்க முயல்வார். ஆனால், அவரது நகைச்சுவை உணர்வு வித்தியாசமானது. பெரும்பாலும், அவர் இடப் பொருத்தமின்றியே சிரிப்பார். இருப்பினும், அன்று அவர் என்ன பணி செய்ய சொன்னாலும், அதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருந்தோம். அந்தத் தலைமையுணர்வை அவர் இயல்பாக வழங்கினார். பெரிய மெனக்கெடல்களோ, போலி நடிப்போ அவரிடம் இருந்ததில்லை. “ஏழையென்ன கிள்ளுக்கீரையா?” அவருக்கு மிகவும் பிடித்த பாடல். ஒருமுறை அவர் அப்பாடலை அறையில் பாடிக் கேட்டதாக நினைவு.

நான் கல்லூரிப் படிப்பை முடித்து, தஞ்சையிலிருந்து வந்த பிறகு இயல்பாகவே தோழர் மணியுடன் தொடர்புகள் நின்று விட்டன. தமிழ் மக்கள் இசை விழா போன்ற நிகழ்ச்சிகளில் காண நேர்ந்தாலும், “அமைப்பு முறைகள்” காரணமாக அவருடன் பேச இயலாது. சில சமயங்களில் தோழர் மணி அதனை மீறி புன்னகைப்பார். நான் பெருமூச்சுடன் பதிலுக்குப் புன்னகைப்பேன்.

பல வருடங்கள் கழித்து, கட்சிப் பிளீனத் தாமதம் ஒரு மாமலை போல நின்ற பொழுது, அதனைத் தீர்மானகரமாக அகற்றும் வேலையை தோழர் மணிதான் ஒரு கூட்டத்தில் செய்தார் எனப் பின்னாளில் கேள்விப்பட்டேன். எனக்கு ஆச்சர்யமாக இருக்கவில்லை. அவரிடம் ஒரு விவசாயிக்கே உரிய உறுதியும், தைரியமும் எப்பொழுதும் இருந்தன.

பின்னர், ஓரிரு வருடங்களில் ஒரு கூட்டத்தில் அவரும், அவரது கருத்துக்களும் கேலியோடு அணுகப்பட்டதைக் கண்ட பொழுது, வருத்தமாகவும், ஆத்திரமாகவும் இருந்தது. இன்று யோசித்துப் பார்த்தால், அன்று அவர் மாத்திரமல்ல, யாரெல்லாம் மாற்றுக் கருத்துகளோ, மாற்றுப் பார்வையோ கொண்டிருந்தார்களோ, அவர்கள் அனைவரையுமே கேலியுடனோ, கோபத்துடனோதான் அன்றைய தலைமையும், தலைமையைத் தாயாக வணங்கிய அணிகளும் எதிர்கொண்டார்கள் என நினைவுக்கு வருகிறது.

தோழர் மணியின் அரசியல் கருத்துக்களில், புரிதலில் போதாமைகள் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர் சிந்தித்தார். அவரது வர்க்கப் பின்புலம், ஆங்கில மொழி அறியாமலிருப்பது உண்டாக்கும் தடைகள் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி சிந்திக்கப் போராடினார். மிக உறுதியாக, சுயதிருப்தி வாய்வீச்சுக்கும், வறட்டுவாதத்திற்கும் எதிராக நின்றார்.

அவர் அமைப்பை விட்டு வெளியேறிய பிறகு, ஒரு சில தடவைகள் இப்பத்தாண்டுகளில் அவரை சந்திக்க முடிந்தது. அவர் மாற்று மருத்துவ முறைகளில், குறிப்பாக தொடு சிகிச்சையில் தன்னைக் கரைத்துக் கொள்ள முயன்றார். வருத்தமாகவே இருந்த போதிலும், வர்க்கங்களுக்கேற்பத்தானே நம்பிக்கைகளும் என உணர்ந்ததால், அவரைப் புண்படுத்த நான் விரும்பவில்லை.

ஓரிரு ஆண்டுகள் முன்பு, அவர் மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, மிகவும் கடுமையான சிகிச்சை, வலியைத் தாண்டிப் போராடிக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டேன். அவரது வாழ்க்கைச் சிக்கல்களும் கடுமையானதை அறிந்தேன். கடும் வருத்தம் தரக் கூடிய செய்தியாக இருந்தது. ஆனால், அவர் எல்லா வலிகளையும் தாண்டி தனது இயல்பில் இருக்க முயன்றார் எனத் தோழர் பரமா சொன்ன பொழுது, அச்செய்தி ஆச்சர்யமளிக்கவில்லை. ஒரு விவசாயிக்கே உரிய தன்னைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத தன்மை அவரிடம் எப்பொழுதும் இருந்தது.

இப்படியும் சொல்லலாம். தோழர் மணி ஒரு தஞ்சை விவசாயிக்கே உரிய பலம் மற்றும் பலவீனங்களோடு, ஒரு அரசியல் செயல்பாட்டாளராக வாழ்வதற்கு தொடர்ந்து போராடினார். நக்சல்பாரிப் புரட்சியாளர்களில் வெகுசிலரே இத்தகைய விவசாயியின் தன்மையுடையவர்கள். அதனாலேயே, வெகுவாக கவனம் பெறாதவர்களாக, அவர்களது வாழ்வு கடும் உழைப்பில் கடந்து போனது.

ஒரு சில ஆண்டுகள் முன்பு, அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, எனக்குத் தொலைபேசியில் அழைத்தார். தனது அரசியல் கருத்துக்களைத் தொகுத்து நூல் வெளியிடப் போவதாகவும், அதற்கு அணிந்துரை எழுதித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அப்பொழுது அவரது உடல் இருந்த அபாய நிலையில், அவர் ஏன் இதனைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என எனக்குக் கவலையாக இருந்தது. ஆனால், எப்பொழுதும் போல் அதனை சொல்லத் தயங்கி, நிச்சயம் எழுதுகிறேன் தோழர் என வாக்களித்தேன்.

பின்னர், அவர் அந்நூலாக்கப் பணியை கைவிட்டு விட்டார் எனக் கேள்விப்பட்டேன். அதன் பின்னர் அவரை ஒரே ஒரு முறை ஒரு நிகழ்வில் சந்தித்த பொழுது, அவர் அதனை மறந்திருந்தார். என்னைப் பொருத்தவரை, இந் நினைவுக் குறிப்பு, அவர் தொகுத்து முடிக்காத நூலுக்கான அணிந்துரை. காலம் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அனுமதிப்பதில்லை. சில மனிதர்களோடு நமக்கு ஏற்படும் பந்தம் வழக்கமான அளவுகோல்களில் பொருந்துவதுமில்லை.

செவ்வணக்கங்கள் தோழர் மணி!

Leave a comment