அகாலம்: காலத்தின் குரல்

காலம் அகாலமாகும் பொழுதுகள் பல சமயங்களில் அறிதலுடன் நிகழ்வதில்லை. அப்படியானதொரு இன்றைய அகாலத்தில், நீண்ட வாசிப்புத் தேக்கத்தை உடைத்து, புஸ்பராணி 2012-இல் எழுதிய அகாலம் நூலை வாசித்து முடித்தேன்.

2016-இல் தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழலில்”, புஸ்பராணியின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு நேர் எதிரான விடுதலைப் புலிகளின் அமைப்பில் செயல்பட்டவரின் அனுபவத் தொகுப்பாகும். அதனை முன்னரே வாசித்திருந்தேன். மேலும், இப்பத்தாண்டுகளில் அடுத்தடுத்து வெளியான ஈழப் போராட்டம் குறித்த புதினங்களில் பெரும்பான்மையை வாசித்திருக்கிறேன். அதனால் கொழும்பு நாலாம் மாடி சித்திரவதைக் கூடம் குறித்து உதாரணக் குறிப்பாக புஸ்பராணி சொல்லிக் கடக்கையில், புரிந்து கொள்ள முடிந்தது.

ஈழப் போராட்டம் குறித்து தீர்ப்புகள் எழுதுவதோ, யார் துரோகி, யார் தியாகி என அறுதியிடுவதோ என்னைப் போன்ற தமிழ்நாட்டவர்களின் வேலையாக இருக்க முடியாது. எனவே, புஸ்பராணியின் நோக்கில் ஏற்பு, மறுப்புகளின்றி புரிந்து கொள்ள முயல்வதே வழி எனத் தேர்ந்தேன். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அரசியல் நிகழ்வுகள், தனிநபர்கள், நிலைப்பாடுகளின் சரி, தவறுகளுக்குள் இந்த நூல் அறிமுகம் செல்லப் போவதில்லை.

புஸ்பராணியின் அலாதியான ஞாபக சக்தியும், அதனை உயிர்ப்போடு விவரிக்கும் திறனும், அதற்கான உழைப்பும் ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. மயிலிட்டி எனும் சிறு ஊரில் பிறந்த புஸ்பராணியும், அவரது சகோதரர் புஸ்பராஜாவும், அவரது மற்ற சகோதர, சகோதரிகளும், அவரது பெற்றோர்களும், அவர்களது தோழர்களும் அரசியல் போராட்டத்தை தேர்வு செய்ததால், அடைந்த கொடுந்துயரங்களை படிக்கப் படிக்க மனம் பதைத்தது.

எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும், வெவ்வேறு அரசியல் நியாயங்களுக்காக மக்கள் தாமாக முன்வந்து அதிகாரத்தின் முன் வதைபடுகிறார்கள். எது அவர்களை போராட வைக்கிறது? எது அவர்களை உந்தித் தள்ளுகிறது? எது அவர்களைத் தாக்குப் பிடிக்க வைக்கிறது? குறிப்பாக கிங்ஸ் கவுஸ் சித்திரவதைகளைப் படிக்கையில் இந்தக் கேள்விகள் அலைகளாக மோதிக் கொண்டிருந்தன.

தேர்தல் பரப்புரைகள், பிரச்சாரம், அமைப்பாக்க வேலைகளில் பிரதானமாக ஈடுபட்டிருந்த புஸ்பராணி அவற்றை விவரிக்கையிலும், தலைமறைவாக இருந்த தோழர்களை பாதுகாத்த அபாயங்களை எடுத்துரைக்கையிலும், ஒரு மனிதருக்கு அரசியல் உணர்வு தரும் உணர்ச்சிப் பிரவாகத்தை, உற்சாகப் பெருக்கை அழுத்தமாக மனக்கண்ணில் கொண்டு வருகிறார்.

“புத்தூர்-புலோலிக் கண்மணிகளாக” அறியப்பட்டு, சித்திரவதையால் வதைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பின்னால் நேர்ந்த தனது சிறை வாழ்வு குறித்து அவர் விவரிக்கையில், அவர் தம்மால் இயன்றவரை தான் கண்ட ஒவ்வொரு மனிதரைக் குறித்தும் பதிந்திருக்கிறார். இவ்வளவு சிரத்தையும் பக்க அளவிற்காக இருப்பதற்கு சாத்தியமில்லை. தேவையுமில்லை.

உதாரணமாக வசீகரன் என்ற சிறுவனைப் பற்றி அவர் குறிப்பிடும் இடத்திலும் அதனையே உணர முடிகிறது. புஸ்பராணியிடம் இருக்கும் மானுட நேசமே இதன் அடிப்படை. சித்திரவதைகள், துரோகங்கள், ஏமாற்றங்கள், துயரங்கள் என அனைத்திற்கும் அப்பால் அவரால் மனிதர்களை இத்தனை வாஞ்சையோடு நினைவு கூர முடிவதும், அவர்கள் குறித்து எழுத முடிவதும் வியப்பையும், நமது எளிய கசப்புகளை எண்ணி வெட்கவும் வைக்கின்றன.

பல்வேறு நபர்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, இறுதியாக அவரை பிரான்சில் சந்தித்தேன், இலண்டனில் சந்தித்தேன் என புஸ்பராணி எழுதும் பொழுது பெரும் ஆயாசம் தொற்றிக் கொள்கிறது. ஒரு இனமாக ஈழத் தமிழர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டதும், அவர்கள் அடைந்த ஈடு செய்ய முடியாத இழப்புகளும் ஏற்படுத்தும் கனத்த மவுனத்திற்கு மொழி மருந்திடலாம். ஆற்றும் எனத் தோன்றவில்லை.

இறுதியாக, கேரளத்து நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்தான் தன்னையும் எழுதத் தூண்டியது என புஸ்பராணி துவக்கத்தில் குறிப்பிடுகிறார். ஒரு வகையில் அஜிதாவின் வாழ்வும், புஸ்பராணியின் வாழ்வும் ஏறத்தாழ இணையாக இருக்கின்றன. அவர்கள் அடைந்த ஏமாற்றம், தனிநபர் பலவீனமல்ல. அவர்கள், தாம் முன்னெடுத்த அரசியல் சித்தாந்தம் அடைந்த தோல்வியை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் மாத்திரமே.

நூல் வாங்க: https://www.panuval.com/agaalam

Leave a comment