ஷாகின்பாக்: மனசாட்சியின் குரல்

06 ஜனவரி 2020

கடந்த டிச-16 தேதியிலிருந்து தில்லி ஷாகின் பாக்கில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 24 மணி நேரமும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், தாங்க முடியாத கடும் குளிரிலும் போராடி வருகின்றனர்.

நேற்று இரவிலிருந்து மும்பையில் “கேட்வே ஆஃப் இந்தியா”-வின் முன்பு அணிதிரண்டுள்ள மக்கள், தில்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராக இடைவிடாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவை தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அலை அலையாக மக்கள் ஏறத்தாழ ஒரு மாதமாக அணிதிரண்டு போராடுகின்றனர்.

ஜே.என்.யூ, ஏ.எம்.யூ ஆகிய கல்வி நிறுவனங்களில் காவல் துறையும், சங் பரிவார் கும்பலும் நடத்திய கொடூரத் தாக்குதல்கள், உத்தர பிரதேசத்தில் இசுலாமியரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட நர வேட்டைகள் ஆகியவை நமக்கு “பாடம் புகட்டவும்”, பயமுறுத்தி பணிய வைக்கவும் நடத்தப்பட்டவை என்பது நாமறிந்ததே.

நிலவும் பொருளாதார மந்தம், உலகளாவிய அரசியல் பதற்ற சூழல், நாடெங்கிலும் இணைய வசதித் தடுப்பு, பெருகி வரும் வரலாறு காணாத அடக்குமுறைகள், காவிக் கும்பல் வன்முறைகள் ஆகியன, நாட்டை மீண்டும் ஒரு எமர்ஜென்சியை நோக்கி ஆளும் வர்க்கம் நகர்த்துவதையே உணர்த்துகிறது. இதனை எதிர்த்து முறியடிக்க வேண்டிய அரசியல் கட்சிகள் சடங்குத்தனமான அறிக்கைகள், போராட்டங்களுடன் நிறுத்திக் கொள்வதையும், தலைமை தாங்கும் உறுதியற்று தயங்குவதையும் காண முடிகிறது.

விடிவெள்ளியாக முளைத்த மாணவர் போராட்டங்கள் மேலும் முன்னோக்கி நகர்வதும், சமூகத்தின் பிற வர்க்கங்கள் போராட்டத்தில் இணைவதும் காலத்தின் கட்டாயம். எதிர்வரும் நாட்கள் இந்திய ஒன்றியத்தில் ஒப்பீட்டளவிலேனும் நிலவி வந்த மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் பாதுகாக்கப்படுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

நாம் எத்தனைதான் விரும்பினாலும், இந்தக் கேள்வியை எதிர்கொள்வதிலிருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

25 பிப்ரவரி 2020

87151698_10157022481697469_8917273913851904000_n

நேற்று சென்னை ஷாகின்பாக் என்று அழைக்கப்படும் வண்ணாரப்பேட்டையில் போராடும் மக்கள் மத்தியில் நின்று கொண்டிருந்த பொழுது, தில்லியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கொலைவெறியாட்டம் நிகழ்த்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவரத் துவங்கின.

தில்லியில் பற்றியெறியும் நெருப்புக்கு அடிக்கொள்ளி எடுத்துக் கொடுத்தவர்கள் யார், அவர்கள் எத்தனை காலமாக, எத்தனை வண்ணங்களில் இயங்குகிறார்கள் எனும் திசையில் சிந்திக்காமல் போனால், உங்களது விசாரணை நேற்றைய நிகழ்விலும், அர்விந்த் கேஜ்ரிவாலிடமும் நின்று விடும்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நமது நாட்டில் விதை விட்டு வளர்ந்த இந்துப் பெரும்பான்மைவாதம், பிரிவினையின் பொழுது கொழுந்து விட்டு எரிந்து, பின்னர் ராமர் கோவில் பிரச்சினையின் மூலம், ஒரு சில பத்தாண்டுகளில் விரைவாக அதிகார பீடத்தை நோக்கி முன்னேறியது.

இந்துப் பெரும்பான்மைவாதம், அதனை ஊட்டி வளர்க்கும் பார்ப்பனியம் ஆகியவை இங்கே ஒரு கட்சியில் அல்ல, இடது, வலது, மத்திமம் என சகல அரசியல் கட்சியினரிடமும் செல்வாக்கு செலுத்துகிறது. காங்கிரசும், பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு வேறு பக்கங்கள் என தமிழர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் நிலவும் இசுலாமியப் பெரும்பான்மைவாதமும் இதே தன்மையுடையதே. எனவே, இது சரி என கடந்து செல்ல முடியாது. பெரும்பான்மைவாதம் எங்கும், எப்போதும், ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. எளிய மக்களின் வாழ்வை அழிக்கிறது.

அம்பேத்கரும், காந்தியும், நேருவும் உருவாக்கிய இந்தியாவின் அடிப்படைகள் ஆட்டம் கண்டு, தலைநகரத்திலேயே காவிப் படையின் துணிகரத் தாக்குதல்கள் நிகழும் காலகட்டத்தில் வாழ்கிறோம். ஆரியத்தை என்றும் எதிர்த்து நிற்கும் தமிழர்கள் என பெருமை கொள்ளும் நாம், சில கேள்விகளை எழுப்பி கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு திருவிழாக் கூட்டம் போல கூடிய “தமிழர்கள்”, வண்ணாரப் பேட்டைக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் திரள மறுப்பது ஏன்? போராடும் இசுலாமியர்கள் “தமிழர்கள்” இல்லையா? உரையாற்றி கடக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, தொண்டர்கள் கூட ஏன் போராட்டத்தில் அமர்வதில்லை?

“ஷாகின் பாக்” ஏன் இசுலாமியர் பகுதிகளில் மாத்திரமே நடக்க வேண்டும்?மந்தைவெளியிலும், வியாசர்பாடியிலும் இந்துத் தமிழர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் உணர்வு எது? தில்லியில் நிகழ்ந்தவற்றுக்கு எதிராக வழக்கம் போல அறிக்கைகளும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நிகழும்.

அவ்வாறு வழக்கங்களில் நின்று சற்றே எட்டி நிற்பதன் பொருள், வழக்கம் போல இசுலாமியர்கள் தனித்து விடப்படுவதாகவே இருக்கும். ஆர்.எஸ்.எஸ் கும்பல் உருவாக்கிக் கொண்டிருக்கும் கதையாடலுக்கும், அதன் மூலம் “கலவரங்களை” நிகழ்த்துவதற்கும் பொருத்தமானதாக மாறும்.

தில்லியில் நிகழ்ந்தது தமிழகத்தில் நிகழாமல் இருக்க வேண்டுமானால், இசுலாமியரல்லாத மக்கள் போராட்டத்தில் இணைவதன் மூலமாகவே நிகழும். பக்ரீத்துக்கும், ரம்ஜானுக்கும் பிரியாணி மீம் போடுவது, “மாமா-மச்சான்” உறவை சிலாகிப்பது என வழக்கமான ஜல்லிகளின் மூலம் காவி வெறியை எதிர்கொள்ள முடியாது.

Leave a comment