அந்த மழைக்கால மாலை நேரங்களில்,
நீயும் நானும்
கரம் கோர்த்து நடந்த பிரியமான பொழுதுகளில்
வழிதோறும் உதிர்ந்த பூக்களை
நான் சேகரித்து வைத்தேன்.
பின்னர்
அடிவானம் தாண்டி
புள்ளியாய்ச் சிறுத்து,
நீ கண்காணா தூரங்களுக்கு
கரைந்து போனாய்.
அன்று முதல்
சேகரித்த பூக்களை
நுகர்ந்து பார்க்கிறேன்.
துள்ளி விளையாடும் குழந்தைகளிடம்
அவற்றைக் கொடுத்துப் பார்த்தேன்.
துயரமான முட்கள் காயப்படுத்துமென
வாங்க மறுத்தார்கள்.
பூக்காரிகளிடம் விற்கப் பார்த்தேன்.
கண்ணீர் பனித்த பூக்களை
யாரும் வாங்க மாட்டார்களென்று
புறக்கணித்தார்கள்.
பூக்கள் மெல்ல சுமையாகிட,
ஒரு நாளேனும்
நீ மீண்டு வந்து
சூடிக் கொள்வாயென
அவற்றை விட்டு வைத்திருக்கிறேன்.